வந்தே மாதரம் - ஒரு வரலாறு --- தினமலர்

வந்தே மாதரம் தேசப்பாடலாக ஏற்றுக் கொண்டதன் நுõற்றாண்டு விழா வரும் செப்டம்பர் 7ம் தேதியுடன் நிறைவடை கிறது. சுதந்திர போராட்ட காலத்தில் இந்தியா முழுவதும் பாடப்பட்ட இப்பாடல், பிரிட்டிஷாருக்கு எதிரான கோஷமாகவும் ஒலித்தது. வந்தே மாதரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
""செப்டம்பர் 7ம் தேதி கல்வி நிறுவனங்களில் இந்த பாடலை பாடுவது தனிப்பட்ட விருப்பம்,'' என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் சமீபத்தில் பார்லிமென்டில் அறிவித்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜும்மா மசூதி ஷாகி இமாம் சையத் அகமது புகாரி உள்ளிட்ட இஸ்லாமிய உலிமாக்கள் இந்த பாடலை செப்டம்பர் 7ல் கல்வி நிறுவனங்களில் பாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இதையொட்டியே மத்திய அமைச்சரின் விளக்கம் அமைந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பாடலை கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் அன்று ஒலிக்க வேண்டும் என்று பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்த பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு காரணம், "மா துர்கா' என்ற சொல் இப்பாடலில் இடம்பெற்றுள்ளதுதான். பாரத மாதாவை காளியின் சக்திக்கு ஒப்பிட்டு போற்றப்படுகிறது. இது இந்து பெண் கடவுளை துதிப்பதாக அமைந்துள்ளது. இந்த பாடலை இயற்றியவர் பக்கிம் சந்திர சட்டர்ஜி. 1882ல் பிரிட்டிஷாரின் எதிர்ப்பை மீறித்தான் வங்க தரிசனம் பத்திரிகையில் வெளியான ஆனந்தமடம் நாவலில் இந்த பாடலை வெளியிட்டார்.
அது சமயத்தில் கோல்கட்டாவில் சுதந்திரப் போராட்டங்களின் போதும், பொதுக் கூட்டங்களின் போதும், வந்தே மாதரம்... என்ற கோஷம் ஒலிக்க தொடங்கியது. இது பின்னர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவி பிரிட்டிஷாரை வெளியேற்றும் சுதந்திர தாகத்துக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. இந்த கோஷம் தந்த எழுச்சியைப் பார்த்து பிரிட்டிஷாரே கலங்கினர். இது மந்திரச் சொல் போல் இந்தியர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டதை அவர்கள் உணர்ந்தனர். ஆகவே இந்த பாடலுக்கு தடை விதிக்க அவர்கள் எண்ணினார்கள்.வந்தே மாதரம்... தடை செய்யப்பட்டது. கோஷம் எழுப்பியவர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். 1896ல் கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூரே இந்த பாடலை பாடினார். 1905 செப்டம்பர் 7ம் தேதி பனாரசில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தேசப்பாடலாக வந்தே மாதரம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வந்தே மாதரம் என்ற சொல்லுக்குள் இருந்த சக்தியை புரிந்து கொண்ட லாலா லஜபதி ராய், லாகூரில் வந்தே மாதரம் என்ற தலைப்பில் பத்திரிகை தொடங்கினார். சுதந்திரத்துக்குப் பின் ஜன கண மன... எனத் தொடங்கும் பாடல் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்படும் வரை, வந்தே மாதரம்தான் தேசிய பாடலாக ஒலித்துக் கொண்டிருந்தது. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியர்களின் உணர்வை துõண்டிய பாடலான வந்தே மாதரம்தான் தேசிய கீதமாக இருக்க வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது. தாகூரின் ஜன கண மன... பாடலை தேசிய கீதமாக ஏற்றுக் கொள்வதிலும் அப்போது சர்ச்சை நிலவியது.
1937ல் காங்கிரஸ் காரிய கமிட்டியிலும் இந்த சர்ச்சை வந்த போது, "இந்த பாடலில் உள்ள சில சொற்கள் குறித்து முஸ்லிம் நண்பர்கள் தெரிவிக்கும் எதிர்ப்புகளை இந்த கமிட்டி புரிந்து கொள்கிறது. எனவே முதல் இரண்டு செய்யுள் பத்திகளை மட்டும் பாடிக் கொள்ளலாம்' என்று காரிய கமிட்டி தீர்மானித்தது.வந்தே மாதரம் பாடலின் மையக்கருத்து, துர்கை மீதான துதியாக அமைந்துள்ளதால்தான் இந்த பாடலை தேர்வு செய்யவில்லை என்று, நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு 1937ல் எழுதிய கடிதத்தில் தாகூர் குறிப்பிட்டிருந்தார். 1950 ஜனவரி 24ல் கூடிய அரசியல் சாசன நிர்ணய சபையில் இப்பிரச்னை இறுதியாக விவாதிக்கப்பட்டது. அப்போதுதான் இந்தியாவின் தேசிய கீதம் ஜன கண மன... என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.வந்தே மாதரம் ஏன் தேசிய கீதமாக தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கு அரசியல் சாசன நிர்ணய சபையின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் விளக்கம் அளித்தார். "ஜன கண மன... எனத் தொடங்கும் பாடல்தான் இந்தியாவின் தேசிய கீதம். வந்தே மாதரத்துக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்று தொடர்பு உள்ளது. ஜன கண மன... என்ற தேசிய கீதத்துக்கு உரிய இணையான கவுரவத்தையும் அந்தஸ்தையும் வந்தே மாதரம் பாடலுக்கு வழங்க வேண்டும் (கைதட்டல்). இந்த விளக்கம் உறுப்பினர்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்' என்று ராஜேந்திரபிரசாத் குறிப்பிட்டார்.
தற்போது, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இந்த தேசப்பாடலை செப்டம்பர் 7ல் எல்லா கல்வி நிறுவனங்களிலும் பாட வேண்டும் என்றும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. வந்தே மாதரத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் மகாகவி பாரதியார். வந்தே மாதரம்... ஜெய வந்தே மாதரம்... வந்தே மாதரம்... நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்... குளிர்பூந் தென்றலும், கொழும்பொழிற் பசுமையும் என்று இப்பாடல் தொடங்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய இப்பாடலை இன்று கேட்டாலும் அன்றைய சுதந்திர வேட்கை உள்ளத்தில் உருவாகும். முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் கருத்தின் படி தேசிய கீதத்துக்கு உரிய மதிப்பு மற்றும் கவுரவத்தை இப்போதும் நாம் வந்தே மாதரம்... பாடலுக்கு வழங்க வேண்டும். தேசத்தை பாராட்டும் வந்தே மாதரம்... சுதந்திரத்துக்கு முன் ஒலித்தது போல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.

0 Comments:
Post a Comment
<< Home