September 16, 2006

போராட்டக்களம்

இந்த தொலைப்பேசி எல்லாம் வருவதற்க்கு முன்பு தந்தி(Telegram) என்னும் ஒன்று அதிகமாக புழக்கத்தில் உண்டு. எதாவது அவசர செய்தி என்றால் உடனே தந்தி அடித்து விடுவர். நெல்லையில் தந்தி அடித்தால் சென்னைக்கு 3-4 மணி நேரத்தில் வந்து விடும். என் வீட்டிற்கு தந்தி வந்தால் உடனே பரபரப்பாகி விடும். தந்தியை கையெழுத்து போட்டு வாங்கும் முன்பே எல்லோரும் பதற ஆரம்பித்து விடுவர்.

நெல்லையில் இருக்கும் என் மாமா, தீபாவளி அன்று வாழ்த்து தந்து அனுப்புவார். அது சரியாக, தீபாவளி அன்று காலை வந்து அடையும். தந்தியை படிக்கும் முன்பே அம்மா, பல விதமாக சிந்திக்க தொடங்கி விடுவார். கடைசியில் வாழ்த்து தந்தி என்றதும் சமாதானம் ஆகி, அந்த மாமாவை திட்டிக்கொண்டே சமையல் அறைக்கு செல்வார். இப்போது எல்லாம் தொலைப்பேசி வந்துவிட்டது. நெல்லை மாமாவும் தொலைப்பேசியில் வாழ்த்து சொல்கிறார்.

துபாயில் இருக்கும் என் அண்ணன் தொலைப்பேசியில் அழைக்கும் போது எல்லாம், எனக்கும் பதற்றமாக இருக்கும். நாங்கள் இருவரும் மின்னஞ்சலில் உரையாடுவோம். எதாவது முக்கிய செய்தி என்றால் மட்டுமே தொலைப்பேசியில் தொடர்பு கொள்வோம். அதிர்ஷ்டவசமாக கடந்த முறை வரை எந்த ஒரு பதற்றமான செய்தியும் இல்லை. ஆனால், இந்த முறை, அண்ணன் தொலைப்பேசியில் அழைத்தது ஒரு முக்கிய செய்தி சொல்வதற்காக தான். அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. சிங்கார சென்னையில் பரவி வரும் சிக்குன்குனியா (சரியா?) என் தந்தையை பிடித்துவிட்டது.

இரண்டு நாட்களாக பலமான காய்ச்சல் மற்றும் உடல் வலி இருக்கிறது. ஆனால் மருத்துவமனைக்கு போகாமல் வீட்டில் உள்ள மருந்துகளை சாப்பிடுகிறார். வயதானவர்கள், குழந்தைகள் போல் அடம் பிடிப்பார்கள் என்று சொல்ல கேட்டிருப்பீர். அப்பாவுக்கு 70 வயது ஆகிறது. அம்மா எவ்வளவு முறை மருத்துவமனைக்கு அழைத்தும் அப்பா பிடிவாதமாக வர மறுக்கிறார்.

உடனே வீட்டிற்க்கு போன் செய்தேன். அப்பாவிடம் பேசி எப்படியாவது மருத்துவனைக்கு போக வைக்க வேண்டும். அண்ணனை விட அப்பாவிற்கு என் மீது பாசம் அதிகம். விட்டிற்கு கடைசி பிள்ளை மீது எப்போதுமே அதிக அன்பு இருக்கும். நான் சொன்னால் அப்பா கேட்கலாம். நானும் அப்பாவிடம் பல விதமாகஎடுத்து கூறினேன். இறுதியில் அவர் கேட்ட கேள்விக்கு நான் திகைத்தாலும் என்னிடம் பதில் இல்லை. 'நீ இங்கே இருந்து என்னை Doctor' கிட்ட கூடிட்டு போக வேண்டியது தானே?'.

உண்மைதான், பணிக்கு வந்த பின் குடும்பத்துடன் செலவிடும் நேரம் வெகுவாக குறைந்துவிட்டது. கல்லூரி முடிக்கும் வரை வீட்டிலே தங்கி விட்டு பணிக்காக இடம் மாறும் போது சிலவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.எல்லோரையும் போல் நானும் பணிக்கு வந்த பின் அப்பாவுக்கு ஒய்வு தர வேண்டும் என் எண்ணிணேன். என் படிப்பிற்காக அவர்கள் இழந்தவற்றை வாங்கி தர வேண்டும். அவர்கள் இது வரை தாங்கி வந்த சுமைகளை குறைத்து சிலவற்றை நான் ஏற்க வேண்டும்.

போராட்டக்களம் ஆகி விட்ட வாழ்க்கையில், ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயனுள்ள முறையில் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிதாகி விட்டது. இந்த நிலையில் இலக்கை அடைவதற்க்கு சிலவற்றை இழக்க வேண்டியுள்ளது. அப்பா எனக்கு கூறும் அறிவுரைகளில் இதுவும் ஒன்று,

" வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறும் போது இரண்டு படிகள் கீழே சறுக்கும். இரண்டு படி கீழே சறுக்குது என்பதற்காக படி ஏறாமல் மட்டும் இருக்க கூடாது."

அன்புடன்,

- ஸ்ரீதர்

1 Comments:

At September 16, 2006 1:33 PM, Blogger துளசி கோபால் said...

// 'நீ இங்கே இருந்து என்னை Doctor' கிட்ட
கூடிட்டு போக வேண்டியது தானே?'.//

இதுக்கு பதில்தான் நீங்களே சொல்லிட்டீங்களே.

//என் படிப்பிற்காக அவர்கள் இழந்தவற்றை வாங்கி தர வேண்டும். அவர்கள் இது வரை தாங்கி வந்த சுமைகளை குறைத்து
சிலவற்றை நான் ஏற்க வேண்டும்//

கூடவே இருந்தா இது எப்படி நடக்கும்?(-:

 

Post a Comment

<< Home