வானவில் -- வலையில் விழுந்தது, விகடன்
""குருவி தலையில் பனங்காயப் பாருங்க சித்தெறும்பு முதுகுல பாரங்கல்லப் பாருங்க. பள்ளிக்கூடம் எந்தப் பக்கம் கனவுல பாக்கல ஆனா ஆவன்னா ஒரு எளவும் புரியல...''
எனக்கூடிப்பாடுகிற இந்தக் குழந்தைகள். ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அழுக்குச் சட்டையும் எண்ணெய் காணாத தலையுமாக பரிதாபமாகத் தெருக்களில் சுற்றிப் பிச்சை எடுத்து வாழ்ந்தவர்கள்தான். இவர்களின் வாழ்க்கையில் கல்வி விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது "வானவில்' அமைப்பு.
""2004 டிசம்பரில் சுனாமி வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாம் என்று நண்பர்களெல்லாம் சேர்ந்து நாகப்பட்டினம் வந்தோம். ஒரு நாள், இங்கே ஒரு குழந்தை இடுப்பில் இன்னொரு குழந்தையைத் துõக்கிக் கொண்டு பிச்சை எடுப்பதைக் கண்டு அதிர்ந்தோம்.
ஏராளமான உணவுப் பொட்டலங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களக்கு அனுப்பப்பட்டு, நிறைய மீதியம் ஆனதே... ஏன், இந்தக் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கவில்லையா? என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது சுனாமி, முகாம்களில் கூடத் தங்க இடம் கிடைக்காத ஒரு கூட்டம் இருப்பது.
இங்கே தம்பித்துறை பார்க்கில் கிட்டத்தட்ட 44 குடும்பங்கள் இப்படிப் பிச்சை எடுப்பதையே தொழிலாகக் கொண்டு இருந்தன. அந்தக் குடும்பத்துக் குழந்தைகளை எல்லாம் அழைத்துப் போய் "நடராஜன் தமயந்தி ஸ்கூலில் சேர்த்துக் கொள்ளச் சொன்னோம். அவர்களும் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால் அங்கு படிக்கும் குழந்தைகள் இந்தக் குழந்தைகளைத் தங்களுக்கு இணையாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. காரணம், இந்தக் குழந்தைகளிடம் இயல்பாகவே ஊறியிருந்த முரட்டுக் குணம். பார்க்கிறவர்களிடம் எல்லாம் கையை நீட்டிப் பிச்சைக் ÷ கட்கும் பழக்கம். சுத்தமாக இல்லாதிருத்தல் என எல்லாவிதத்திலும் அந்தப் பள்ளிக் குழந்தைகளிடமிருந்து இவர்கள் ரொம்பவே முரண்பட்டு இருந்ததுதான். அதுமட்டுமல்லாமல், அறிவு வளர்ச்சியில் இவர்கள் மிக மிகப் பின் தங்கியிருக்கிறார்கள். இவர்களின் முந்தைய தலைமுறை கல்விக் கூடத்தையே எட்டிப் பார்த்தது இல்லை. இப்படி மொத்தமாக சமூகத்திலிருந்து அந்நியப்பட்டிருந்த இந்த மக்களின் குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டதுதான் "வானவில்' ஸ்கூல் என்கிறார். இதன் தலைமை நிர்வாகி ரேவதி.
நாகையில் தெருவோரம் பிச்சை எடுக்கும் சிறவர்களை ஒவ்வொருவராகத் தேடிப் பிடித்து அழைத்து வந்து ஒரு இடத்தில் அமர்த்தி ஜாலியான குழந்தைப் பாடல்களைப் பாடச் சொல்லிக் கற்றுக் கொடுத்தோம். ஆனால், அவர்களை நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்த்தி வைப்பது எங்களுக்குப் பெரிய சிரமமாக இருந்தது. காரணம் அந்தக் குழந்தைகள் ஓரிடத்தில் நில்லாமல் அங்கே இங்கே ஓடிப் பிச்சை எடுக்கவே பழகியிருந்தன. தவிர ஒரு குழந்தைக்கு ஒர நாளைக்கு 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை பிச்சை கிடைக்கும் என்பதால், அதன் பெற்றோர்களும் அந்தக் குழந்தையைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப விரும்பவில்லை.
எனவே சும்மா போய் உங்களின் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கிறோம். குழந்தைகளை அனுப்புங்கள் என்றால் அதில் அர்த்தம் இருக்காது என்பதால் முதலில் அவர்களுக்குச் சின்னச் சின்னதாக சுய தொழில்களைக் கற்றுக் கொடுத்து, அவர்களின் வருமானத்துக்கு வழி செய்தோம். ஆனால், கண்டிப்பாக பிள்ளைகளைப் பிச்சை எடுக்க அனுப்பக்கூடாது என்று திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொன்ன பிறகு இப்போது நுõற்றுக்கணக்கான குழந்தைகள் தவறாமல் எங்கள் பள்ளிக்கு வந்து படிக்கிறார்கள். "நம்மைப் போல இந்தக் குழந்தைகளும் ஆகிவிடக்கூடாது என்கிற உணர்வை அந்தக் குழந்தைகளின் பெற்றோரிடத்திலும் உருவாக்கியதுதான் வானவில்லின் வெற்றி.
இந்தச் சமூகத்திலிருந்து முதன் முறையாக அந்தோணி, மாரிமுத்து, என்கிற இரண்டு மாணவர்கள் பள்ளி இறுதி ஆண்டு போயிருக்கிறார்கள். அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. இவர்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடையாது. அதனால் அரசாங்கத்தின் சலுகைகளை இவர்கள் அனுபவிக்கவோ, முறையான கல்வி பெறவோ முடியாது. இவர்கள் காலம் காலமாகக் காடுகளில் வேட்டையாடி கால்நடையாக நடந்த திரிந்த நாடோடி. இனக் குழுக்களின் வழி வந்தவர்கள். வேறு சில மாவட்டங்களில் இத்தகையவர்களுக்கு "ஆதியன்' என்கிற பெயரில் சாதிச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. அது போல சில சான்றிதழை இவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறோம் என்கிற ரேவதி.
வானவில் அமைப்பில் மொத்தம் எட்டு பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்பு முழுக்க முழுக்க நண்பர்களின் பொருளாதார உதவியாலேயே நடத்தப்படுகிறது. எங்களுடைய vavavil.org என்கிற வலைதளத்துக்கு வந்தால் இந்த அமைப்பைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்' என்கிறார்.
"குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு
பாட்டு எல்லாம் சொல்லுது
என்னைப் போல எந்தத் தெய்வம்
கூலி வேலை செய்யுது....'' என்று கோரஸாகப் பாடத் தொடங்குகிறார்கள் குழந்தைகள்!

3 Comments:
நல்லதொரு கட்டுரை.
ஆனால் தலைப்பு கொஞ்சம் குழப்புகிறது. வலையில் விழுந்தது, விகடன்
விகடனிலிருந்து எடுத்த கட்டுரையா? அப்படியானால் அதை சரியாக குறிப்பிட்டிருக்கலாம்.
விகடன் ஏதோ வலையில் விழுந்தது போல அர்த்தம் அளிக்கிறது.
வானவில்லின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. முடிந்த உதவியை செய்கிறேன்.
நன்றி ராசா,
அமாம், அது விகடனில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி. இதில், முதல் பகுதி (வானவில்) கட்டிரையில் தலைப்பு, வலையில் விழுந்தது என்றால் இனையத்தில் மேயும் போது கிடைத்தது.
இனிமேல் தலைப்பை புரியும்படி வைக்க யோசிக்கிறேன்.
தலைப்பு கண்டிப்பாக குழப்புகிறது ஸ்ரீதர். விகடன் என்ன வலையில் விழுந்தது என்று தேடும்படி இருக்கிறது
Post a Comment
<< Home