தீபாவளி வந்தாச்சு!

அட, இன்னும் தீபாவளி வருவதற்கு ஒரு வாரம் கூட இல்ல.. இப்பவே வாழ்த்து மடல், தந்தி, அஞ்சல் எல்லாம் அனுப்ப ஆரம்பிக்கனும். அதனால நான் முதலிலேயே உங்களுக்கு வாழ்த்து சொல்லிட்டேன். இன்னும் ஒரு வாரத்துக்கு உங்க அஞ்சல் பெட்டி முழுசும் வாழ்த்து மடல் நிரம்ப போகுது. பள்ளி, கல்லூரி நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டு சீனு மாமா, அவங்க வீடுக்கு போன தீபாவளிக்கு வந்துட்டு போன ரகசிய சினேகிதி மற்றும் யார்கிட்ட எல்லாம் நம்ம அஞ்சல் முகவரி இருக்குதோ அவங்க கிட்ட இருந்து கண்டிப்ப ஒரு வாழ்த்து தந்தியாவது வந்திடும். நாம் மறந்து போனவர்கள் கூட, நமக்கு மறக்காம தீபாவளி வாழ்த்து அனுப்பிடுவாங்க.
எங்களை மாதிரி சென்னையில வளர்ந்த பசங்களுக்கு தீபாவளிதான் முக்கியமான பண்டிகை. பண்டிகைக்கான வேலையை ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சிடனும். துணி எந்த நிறத்துல எடுக்கிறதுல தொடங்கி, அது எந்த கடையில எடுக்க போறது வரைக்கும் முடிவு பண்ணனும். நான் வட சென்னையிலே வளர்ந்ததால, எப்போதுமே, வண்ணாரபேட்டையில இருக்கிற G.A. Road தான் எனக்கு ரங்கநாதன் தெரு. ஒரு மாசத்துக்கு முன்னால போய் துணி எடுத்திடுவோம். கடை வீதியில் இருப்பக்கமும் அலங்கார விளக்குகள், துணிக்கடை பொம்மைகள் எல்லாம் புதுசா பாக்குற மாதிரி இருக்கும். எந்த தீபாவளிக்கும் நான் கேட்கும் துணி கிடைக்காது. நான் கேக்குறது எல்லாம், சிறுபிள்ளதனமா இருக்கும். 'Superman', 'Spiderman' போடுற சட்டை எல்லாம் கேட்டா யாரு வாங்கி தருவா? 'Shakthimaan' வந்த சமயம், 'Shakthimaan' போடுற சட்டைத்தான் வாங்கனும் தெருவிலேயே சண்டை போட்டிருகேன். கடைசிலே பூப்போட்ட சட்டையும், கருப்பு கலர் 'Trouser' ம் வாங்கி தந்தாங்க.. ரொம்ப வருத்தமா இருந்திச்சு.
பட்டாசு இல்லாம தீபாவளியை நினைச்சு கூட பாக்க முடியாது. இரண்டு வாரத்துக்கு முன்பே பேப்பர் எடுத்து வைச்சு, எதோ, பலசரக்கு கடைக்கு லிஸ்ட் போடுற மாதிரி போடுவோம். இந்த விஷயத்துல எனக்கும், அண்ணணுக்கும் பெரிய சண்டையே நடக்கும். கடைசியா, 'Delivery Version' ஒன்னு இரண்டு வாரம் கழிச்சு தயாராகும். நமக்கு எல்லாம் பெருசா சத்தம் வர வெடி தான் பிடிக்கும். வெடிக்க பயம் தான், ஆனாலும், மத்தவங்க கிட்ட தந்த வெடிக்க சொல்லிட்டு காதை மூடிப்பேன். இரவு மத்தாப்பு போட்ட அப்புறம் தான் சாவகாசமா உக்கார முடியும். இதில மிச்சம் இருக்கிறத சேமிச்சு கார்த்திகை தீபத்துக்கு வெடிப்போம்.
அப்போ, தூர்தர்ஷன் காலம். தீபாவளிக்கு முதல் நாள் சிறப்பு ஒளியும், ஒலியும் போடுவாங்க. அதில கண்டிப்பா, நதியாவோட "மத்தாப்ப சுட்டு சுட்டு போடடுமா" பாட்டோட ஆரம்பிக்கும். அப்புறம், நாயகன் படத்துல இருந்து 'நான் சிரித்தால் தீபாவளி'. ஒளியும், ஒலியும் முடிஞ்சதும். ஒரு நாடகம் போடுவாங்க. ஒவ்வோரு தீபாவளிக்கும் அந்த நாடகம் கண்டிப்பா மறு ஒளிபரப்பு செய்வாங்க. அந்த நாடகத்துல, கோவை சரளாவும், அவங்க கணவரும் தீபாவளி கொண்டாட கிராமத்துல இருந்து சென்னையில இருக்கிற ஒரு-விரல் கிருஷ்ணராவ் வீடுக்கு வருவாங்க. வழியில விலாசத்தை தொலைச்சுடுவாங்க. அவங்க எப்படி வீட்டை கண்டு பிடிக்கிறாங்கனு நகைசுவையா எடுத்திருப்பாங்க. இதை எல்லாம் பாக்கும் போதுதான் தீபாவளி வந்த மாதிரி தான் இருக்கும்.
இன்னும் தீபாவளியை பத்தி சொல்லிக்கிட்டே இருக்கலாம். பண்டிகை வந்தாலே ஒரு புது மகிழ்ச்சி நமக்குள்ளே வந்திடும். வருஷத்துல ஆறு மாசம் உழைத்த பிறகு, மீதி ஆறு மாசம் வர பண்டிகைகள் களைப்பை எல்லாம் மறக்க செய்து, அடுத்த வருடத்திற்க்கு தேவையான வலுவை தந்திடும்.
கடந்த நாலு வருஷமா, நான் குடும்பத்தோட சேர்ந்து தீபாவளியை சிறப்பா கொண்டாட முடியலை. ஆனா! இந்த வருஷம் ஒரு வழியா விடுப்பு எடுத்து, வீடுக்கு தீபாவளிக்காக போகிறேன். எனக்கு பிடிச்சதெல்லாம் அம்மா கிட்ட சொல்லி தயார் செய்ய சொல்லிட்டேன். இந்த தீபாவளி கண்டிப்பா எனக்கு மறக்க முடியாததாக இருக்கும். சென்னையில் இருந்து திரும்பும் வரை, சிறிது காலம் வலைப்பக்கத்துக்கு வர முடியாது.
உங்களுக்கும் இந்த பண்டிகை காலம், எல்லா நன்மையும், மகிழ்ச்சியையும் தர எனது வாழ்த்துக்கள்.
- ஸ்ரீதர்

3 Comments:
உங்களுக்கும் இந்த பண்டிகை காலம், எல்லா நன்மையும், மகிழ்ச்சியையும் தர எனது வாழ்த்துக்கள். :-))))
வாங்க குமரன். உங்க வாழ்த்து எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்க்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Post a Comment
<< Home