July 07, 2006

வலையில் விழுந்தது - விகடன்



விர்ர்ர்ரென விரைந்து வருகிறது ஒரு படகு. கடலின் நடுவே சின்னச் சின்னதாக மணல் திட்டுக்கள், பொட்டலங்களைத் துõக்கியெறிவது போல சிலரை அவசரகதியில் தள்ளிவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போகிறது படகு.

கரை மணலைப் பார்த்த புன்னகையும், சொந்த மண்ணைத் தொலைத்த கண்ணீருமாக இப்படி தினம் தினம் கூட்டம் கூட்டமாக இந்தியக் கடலோரம் வந்து இறங்குகிறார்கள் ஈழத் தமிழர்கள்

பிழைச்சு வந்துட்டம். இனி பயம் இல்லை. அழக்கூடாது அம்மா இருக்கேன். அழாதேடா செல்லம் என்று தேற்றுகிற தன் தாயின் மடியில் முகம் புதைத்து உடல் நடுங்கக் கதறுகிறாள் ஜனனி. அப்பா.... அப்பா.... என்ற ஒரே வார்த்தை மட்டுமே திரும்பத் திரும்ப. மனைவியம் மகளும் மட்டும் பிழைத்தால் போதுமென்று இருந்த பணத்தையெல்லாம் படகுக்காரனுக்குக் கொடுத்து அனுப்பிவைத்திருக்கிறார் அந்தப் பாசமிகு தந்தை.

பத்து மணி நேரத்துக்கும் மேலாக, மூச்சுத் திணறலோடு உயிரின் விளிம்பில் தத்தளிக்கிறது எட்டுமாதப் பிஞ்சு லச்சு. உக்கிரமான கடல் காத்து வீசு அலை எங்களது போட்டில் விழுந்துடுச்சு. கடவுளே.... சால கடல் நீர் இந்தப் பிள்ளையின் முகத்தில் அறைஞ்சிடுச்சு. என் பிள்ளைக்கு மருத்தும் பார்க்க இயலுமா? என்று கதறுகிற யோகேஸ்வரியுடன் கடற்படையினரிடம் மன்றாடிக் கொணடு டருக்கிறார் கணவர் யோகராசா.

படகு கவிழ்ந்து எல்லோரும் ஆளுக்கு ஒரு திசையில் நீந்திப் போனோம். என்னோட மூன்று மகள்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் என் சின்ன மகனை மட்டும் முதுகில் சுமந்து நீந்திக் கொணடே வந்தேன். இரவு நேரம் இருட்டைத் தவிர, எதுவும் தென்படவில்லை. மூர்ச்சையாகி மயங்கிய பிள்ளையைச் சுமக்கமாட்டாமல் தண்ணீரிலேயே விட்டுவிட்டு இருபதடி துõரம் நீந்தி வந்தால் காலில் கரை தட்டுப்பட்டது. ஐயோ.... என் பிள்ளையை நானே கொன்றுவிட்டேன். என்னை எந்தக் கடவுளும் மன்னிக்கமாட்டார் என்று கத்துகிறார். அகதிகள் முகாமில் இருக்கும் கந்தசாமி.

இலங்கைப் போரில் துõக்கி எறியப்பட்டுக் கூட்டம் கூட்டமாக அகதிகளாக ராமேஸ்வரம் தீவில் அடைக்கமாகிறார்கள் இலங்கைத் தமிழர்கள். மன்னார், பேசாலை பகுதிகளிலிருந்து புறப்படும் படகுகள் ஏக்கமும் துயரமும் சுமந்தபடி வந்து கொண்டே இருக்கின்றன.

18 கி.மீ கடல் பயணத்தில் மரணத்தின் வாசல்வரை சென்று பிறைக்கிறார்கள் அகதிகள். எங்கள் படகில் மொத்தம் 12 பெரியவர்கள், 5 குழந்தைகள், தலைக்குப் பத்தாயிரமும், சிறுசுகளுக்கு 8 ஆயிரமும் தந்து படகு ஏறினோம். நடுக்கடலில் வந்தபோது படகின் ஓரத்தில் விரிசல் விழுந்ததாகச் சொல்லி படகை நிறுத்திவிட்டார்கள். உயிர் பிழைக்கத்தானே படகு ஏறினோம். இப்படி நடுக்கடலில் அனாதைப் பிணமாக வேண்டியதாகிப் போச்சே! என்று அழுதோம். எங்களது உடைமைகளையெல்லாம் துõக்கிக் கடலில் எறிந்தார்கள். பாரம் குறைஞ்சாதான் படகு பிழைக்குமாம். எங்களுக்கு மாற்று உடுப்புக்கூட எதுவும் இல்லை. பையில் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச பணமும் கடலோடு போய்விட்டது. அகதியாக இறங்கியதுமே மானம் மறைக்க உடுப்பு போடக் கேட்கவேண்டியதாகிப் போச்சு. இப்படிப் பிழைக்க வேண்டுமா என்று மனசுக்குள் ஒரு வலி உறுத்திக் கொண்டே இருக்கிறது என்று மரணவாசலைக் கடந்து வந்த தன் துயர அனுபவத்தைச் சொல்கிறார் கோமஸ்.

தொண்டு நிறுவனம் தந்த ரொட்டித் துண்டை அமிர்தமாக எண்ணிச் சாப்பிடுகிறாள் நிஷாந்தினி. ஒரு நாள் பசியை ஈடுகட்டுகிற அவசரம் அவள் கண்களில்!

நல்ல இசை கேட்டால், குழந்தை நன்றாகப் பிறக்கும் என்றார் திரிகோணமலை டாக்டர். என் வயிற்றில் வளரும் பிள்ளைக்கு ஷெல் அடிக்கும் சத்தம்தான் பரிச்சயம். நாங்கள் பிறந்து அகதியானோம். என் பிள்ளை பிறக்கிறபோதே அகதி. ஐயோ ஏன் பிள்ளை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டேனோ? என்று தன் வயிற்றுக்குள் வளரும் எட்டு மாத உயிரைத் தடவிக் கெண்டு கலங்குகிறார் செல்வி.

கடந்த வாரம் நாங்கள் போக இருந்த போட்டை தேவிக்காரர்கள் எரிச்சுப் போட்டாங்க. யாரும் அகதியாப் போகக்கூடாதுன்னு மிரட்டினாங்க. நாங்க போகத் திட்டமிட்டிருந்தது நெரிஞ்சுருந்தா, இந்நேரம் ஏதேனும் ஒரு புதைகுழியில் பிணமாகிப் புதைஞ்சிருப்போம் என்கிறார் கிறிஸ்டியா.

கடல் வழியா தமிழ்நாடு வந்துட்டா, நாங்க பிழைச்சோம். இல்லையென்றால் கடலிலேயே இறந்து போவோம். ஆனால் எங்கள் நாட்டில் சிங்களப் படையிடம் சிக்கினால் ஆண்கள் உடல் சிதைந்து சின்னாபின்னமாகி இறக்க வேணும். பெண்கள் சிக்கினால் பல ஆண்களின் வல்லுறுவுக்கு ஆளாகி இறக்க வேணும். கடலுக்கு அப்படியெல்லாம் சித்ரவதை செய்து கொல்லத் தெரியாதுதானே?

பிழைத்து வந்து அகதியாக வாழ நேர்ந்தாலும், மானத்தோடு இருக்க முடியும். அதனால்தான் எல்லாவற்றையும் துறந்து துணிந்து புறப்படுகிறோம் என்கிற கிறிஸ்டியாவின் வார்த்தைகள் நெஞ்சைச் சுடுகின்றன.

இப்படி ஒவ்வொருவரிடமும் நிறைய சோகங்கள் இருக்கின்றன. உயிரைக் காப்பாற்றித் திட்டில் நம்பிக்கையோடு வந்து இறங்குகிற மக்களை இன்னும் அதிக காயப்படுத்துகின்றன விசாரணைகள்.

தண்ணீரில் நடுங்கிக் கொண்டே வருகிறவர்களுக்கு ஒரு டம்ளர் டீ கொடுக்கக்கூட தனுஷ்கோடியில் வசதி இல்லை. நம் கடற்படையிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அகதிகளை ஆளரவமற்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் படகுக்காரர்கள். 24 மணி நேரமும் வந்து குவியும் மக்கள் வெகு துõரம் நடந்து வந்து கடற்படையிடம் சரணடைய வேண்டியிருக்கிறது. பிறகு காவல் நிலையத்தில் தங்கள் வருகையைப் பதிவு செய்து கொண்டு வெகு நேரம் காத்திருந்த பிறகே, அவர்கள் மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள். குழந்தைகள் மீது யாரேனும் இரக்கப்பட்டுக் குடிக்கப் பால் வாங்கித் தந்தால்தான் உண்டு. அகதிகள் விஷயத்தில் அரசு இன்னும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தனுஷ்கோடியில் இறங்கியவர்களை மண்டபம் முகாமுக்கு அழைத்துச் செல்ல எந்த வாகன வசதியம் கிடையாது. மூட்டை முடிச்சுகளோடு குழந்தைகளையும் சுமந்து கொண்டு வெகுதுõரம் நடக்க வேண்டிய நிலை. அகதிகளை அலட்சியமாக நடத்தாமல், கொஞ்சமாவது கௌரவமாக நடத்த அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற ரோஸ்மேரி, அகதிகளுக்கான தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

மீனவர் கூட்டமைப்பைச் சேர்ந்த அருளானந்தம் அகதிகளோடு மீனவர்களையும் சேர்த்துப் பந்தாடுகிறது அரசாங்கம் என்று குற்றம் சாட்டுகிறார். இலங்கையில் உயிரைப் பணயம் வைத்து அகதிகளை ஏற்றி வருகிற இலங்கைத் தமிழ் மீனவர்கள் அந்நாட்டுக் கடற்படையிடம் சிக்கினால் மரணமோ, சிறைத் தண்டனையோ நிச்சயம். இந்தியக் கடற்படையிடம் சிக்கினாலும் அதே பரிசுதான். இரண்டு நாட்டு அரசுகளும் அகதிகள் மீது இரக்கப்படாமல் நடுக்கடலிலேயே கொன்றுவிட வேண்டும் என்று விரும்புகிறதா? கிடைக்கிற எந்த மீனவரையும், அகதியையும் விடுதலைப் பலியாகவே சித்திரித்து, விசாரணை என்கிற பெயரில் சித்ரவதை செய்து படகைப் பறிமுதல் செய்து சிறையில் தள்ளினால், மீனவர்கள் எப்படி அகதிகளைக் காப்பாற்றுவார்கள்? கடல் நடுவில் உள்ள திட்டில் பசியோடும், பயத்தோடும் இருக்கிற சகோதரர்களைக் கனிவோடு ஏற்றிக் கொண்டு ஒரு தமிழக மீனவன் கரைக்கு வந்துவிட்டால் அவனது வாழ்க்கையே முடிந்துவிடும். இரக்கப்படக்கூடாது என்று அரசாங்கமே சொல்வது தான் வேதனையாக இருக்கிறது. இரண்டு நாட்டு மீனவர்களையும் கைது செய்து கொடுமைப்படுத்துவதை, இரண்டு நாடுகளும் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறார் அருளானந்தம். மண்டபம் அகதிகள் சிறப்பு முகாமுக்குள் நுழைந்தால் தங்களுக்கு வழங்கப்படுகிற உதவித் தொகையையும், உணவுப் பொருட்களையும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் அகதிகள்.

குழந்தைகளுக்கு வழங்கப்படுகிற உதவித்தொகையில் பால் வாங்கவும் ஏலாது. எங்களுக்கு ஏதேனும் உடலுழைப்பு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தால், நாங்கள் எங்கள் உழைப்பிலேயே கொஞ்சம் சுயமரியாதையோடு வாழ்ந்துவிடுவோம் என்கிறார்கள் அகதிகள் கண்ணீரோடு.

அகதிகள் வந்திருப்பதாகக் காவல் நிலையங்களிலிருந்து மண்டபம் முகாம் அதிகாரிகளுக்குத் தகவல் வந்து கொண்டே இருக்கிறது. அரசு அலுவலகத்தில் கோப்புகள் நகரும் விதத்திலேயே மிகவும் மந்தகதியில் நடக்கின்றன. வேலைகள், அகதிகளுக்கு வழங்கப்படுகிற உணவுப் பொருட்களிலும் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் இருக்கின்றன. சொந்த நாட்டில் மட்டுமின்றி, வந்த நாட்டிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள் அப்பாவிகள், எங்கள் சகோதர நாடுதானே இந்தியா எங்கள் நாட்டில் அமைதி ஏற்பட, எங்கள் தமிழ்ச் சகோதரர்கள் உதவி செய்வார்கள்தானே? என்று மூட்டை முடிச்சுகளோடு நம்பிக்கையையும் சுமந்தபடி கேட்கிறார்கள் இலங்கைத் தமிழ் அகதிகள்.

தனுஷ்கோடி கடல் அகதிகளின் கண்ணீரால் அதிகமாகவே கரிக்கிறது!

0 Comments:

Post a Comment

<< Home