July 29, 2006

கடவுளுக்கு ஒர் மடல் -- அஞ்சலில் வந்தது

July 26, 2006

The Matrix -- ஒரு தேடலின் கதைகடந்த வாரத்தில் ஒரு அருமையான ஆங்கில படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான படம் என சொல்வதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. படத்தில் சொல்ல வந்த கருத்துக்கள் அனைவருக்கும் புரிந்து, அதை இயக்குனர் வியக்கும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

2. படம் எதைப்பற்றியது என்றே புரியாமல், ஆனால் காட்சிகள் செய்யும் மாயாஜாலத்தை கண் இமைக்காமல் பார்க்கும் படி அமைந்திருக்க வேண்டும். (இன்னும் சொல்லனும்னா பட்டிக்காட்டான் முட்டாய்க்கடைய பாக்குற மாதிரி).

ஆங்கில படம் பாக்கும் போது நான் எப்போதுமே இரண்டாவது ரகம் தான். யாரையாவது பக்கதில ஒக்கார வச்சிக்கிட்டு கதை கேட்டுக்கிடே இருப்பேன். ஆனா இந்த தடவை அப்படி செய்ய முடியலை. யாருக்குமே புரியாத மாதிரி எடுத்து வைச்சிருக்காங்க.

எல்லாம் நம்ம "The Matrix" படத்த பத்தி தான் சொல்றேன். எத்தனை தடவைப்பார்த்தாலும் புரியாத புதிராகவே இருக்குது. எதோ எனக்கு புரிஞ்சத உங்களுக்கு சொல்றேன்.

படத்துல 'Neo' னு ஒரு கதாநாயகன். நம்ம சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் எல்லோரையும் போல சும்மா பறந்து பறந்து அடிப்பார். அவருக்கு ஒரு ஜோடி 'Trinity' னு பேரு. இவங்க இரண்டு பேரும் சேந்தாங்கனா, சும்மா கில்லி மாதிரி 'Blazer' ல வர வில்லனுங்கல பந்தாடுவாங்க. அப்புறம் இந்த படத்துல, சாரை சாரையா இயந்திர சிலந்தி பூச்சி வரும். இந்த சிலந்திங்க நம்ம மக்களை ரொம்ப இம்சிக்கும்.

படத்தோட முதல் பாகத்தில், நம்ம 'Neo' வ வந்து இன்னோரு உலகத்துக்கு தொலைபேசி மூலமா கொண்டு போவாங்க. அங்க 'Neo'க்கு பறக்குறதுக்கு, சண்டைபோடுறதுக்கேல்லாம் சொல்லி தருவாங்க. அப்புறம் நம்ம கதாநாயகன் தனி ஆளா எல்லாரையும் காப்பத்துவார். இன்னும் கொஞ்சம் கதைக்குள்ளே போனா, நாம இருக்கிற உலகமே ஒரு இயந்திரங்களால் உருவாக்கினது என்றும், நமது விதி இந்த இயந்திரங்க கணினியில பண்ற மாதிரி 'Program' பண்ணியிருக்குதுனு சொல்லவறாங்க. அப்படியே தலை ஒரு அடி மேலே எறி சுத்துற மாதிரி இருக்குது.

மனிதன் தோன்றிய காலம் முதலே இந்த மாதிரி கருத்துக்கள் இருந்து வருகிறது. நாம் எல்லோரும் காலத்தின் அடிமைகள் என உணர்கின்றோம். இப்படத்தில் ஒரு காட்சியில், 'Neo' ஒரு டீக்கடையை (அதாங்க நம்ம 'Coffee Shop') பார்த்து அங்கு உணவு சுவையாக இருக்கும் என்று கூறுவார். உடனே அருகிலிருப்பவர் "நாம் சுவை என்னும் உணர்ச்சியால் அடிமைபட்டிருகிறோம்" என்பார். சிறிது சிந்தித்தால், நமக்கு இறைவன் தந்திருக்கும் ஐந்துபுலன்களே, நம்மை அடிமையாக்கி உள்ளது என்பதை அறியலாம். 'Shakesphere' இந்த உலகம் ஒரு நாடக மேடை எனக்கூறினதை இப்படியும் எடுத்துக்கொள்ளலாம். மனிதன் "நான் யார்?" எனக்கேள்விகளுக்கு இந்த மாதிரி விசித்திர விடை பதிலாக கிடைக்கின்றது. அனைத்திற்க்கும் மூலக்காரணமாக இந்த கேள்வி அமைகின்றது.

"நான் யார்" என்ற கேள்விக்கு பலரும் பல விதமாக பதில் தேடுகின்றனர். ஆத்திகர், இறைவனிடம் சென்று கேட்கிறார். விஞ்ஞானி, பூமியை குடைந்தும், வின்மீன்களை எண்ணியும் அராய்கிறார். ஞானி தனக்குள்ளே தேடுகின்றார். விடை கிடைத்ததோ இல்லையோ, ஆனால், தேடல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒரு பாடல் வரியில், கவிஞர் இப்படி கூறுவார்,

"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்..
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்.."

உயிருள்ள வரை தேடல் தொடர்ந்திருக்கும்.

ஒரு நாள் இரவு, தூங்குறதுக்கு முன்னாடி இதைப்பற்றி யோசித்துப்பாருங்க.. விடை வருதோ இல்லையோ நல்லா தூக்கம் வரும்.

நீங்க ரொம்ப பொருமைசாலி தான்.. இது வரைக்கும் படிச்சிடிங்களே.. சரி அப்படியே இதுக்கும் ஒரு விடை சொல்லிட்டு போங்க..

ஒரு ஊருக்குள்ளே இரண்டு ரயில் பாதைகள் இருக்கு.. ஒன்னுல ரயில் எப்போதுமே போகாது.. இது அந்த ஊர்ல இருக்கிற எல்லோருக்குமே தெரியும். ஒரு நாள், சில பள்ளிக்கூடத்து பசங்க அந்தப்பக்கமா விளையாட போனாங்க. ஒரு பையன் மட்டும், அந்த இயங்காத ரயில் பாதைல விளையாட ஆரம்பிச்சான். மிச்சமிருந்த 6-7 பசங்க, ரயில் போகும் பாதையிலே விளையாட அரம்பிச்சாங்க.

அந்த சமயம் பார்த்து ஒரு ரயில் அந்தப்பக்கமா வருது. இத, அந்த பாதைல தூரமா இருக்கிற 'Line man' கவனிச்சிட்டான். அவனால ஓடிபோய் கத்த முடியாது. பசங்க ரொம்ப தொலைவுல இருக்காங்க. இப்போ 'Line man' கிட்ட ஒரு 'Gear' இருக்குது. அந்த 'Gear' மாத்தினா, ரயில் போற பாதைய மாத்த முடியும். இப்போ 'Line man' எந்த பாதையில ரயில போகவைப்பார்.

1. ரயில் சாதாரணமாக போகாத பாதையில் ஒரு பையன் தான், ரயிலை திருப்பிவிட்டால் ஒரு பையனுக்கு தான் அடிப்படும். ஆனா! அந்த பையன், இந்த பாதையில் ரயில் போகாதுனு நம்பிக்கையா விளையாடிட்டு இருக்கான். ரயிலை அந்தப்பக்கம் திருப்பிவிட்டால், அந்த பையனோட நம்பிக்கை பொய் ஆகிடும்.

2. ரயில் எப்போதும் போகிற பாதையில் விட்டால், பல சிறுவர்கள் அடிப்படுவார்கள்..

சரி.. இப்போ நீங்கதான் அந்த 'Line man' ரயில் போறதுக்குள்ள முடிவு பண்ணுங்க..

நட்புடன்,

ஸ்ரீதர்

July 20, 2006

தமிழ் மாதங்கள் -- ஒரு பார்வைஇந்த வாரம் ஒரு புதிரோட ஆரம்பிக்கலாம்.. இந்த தமிழ் மாதங்களை வரிசைப்படுத்துங்கள்.


சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, ஐப்பசி, மார்கழி, மாசி, தை, பங்குனி

இதற்க்கான விடை இப்பதிவின் இறுதியில்....

இந்த வாரம் என்னை ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சியை தந்தது. அது முன்னாள் இந்திய கால்பந்தாட அணியின் தலைவர் வி.பி. சத்யனின் மரணம். அவரை நான் சில முறை சந்தித்து இருக்கிறேன். என் பள்ளிக்காலங்களில் அருகாமையில் நடக்கும் கால்பந்து போட்டிகளில் தலைமையேற்ப்பார். எனக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் இருந்த காரணத்தினால் அவரை பற்றின செய்திகளை சேகரித்தேன்.

அவரின் தற்கொலை பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு விளையாட்டு வீரரின் முடிவு இப்படி அமைந்துவிட்டது வேதனைக்குரியது. இச்செய்தியை ஒரு இந்திய ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் வாசித்தார்கள். அந்த செய்திக்குப்பின் 'Cricket Controveries' என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பினர். அந்த நிகழ்ச்சியில், கிரிகெட் வீரர்கள் விருந்து விழாக்களுக்கு செல்லும் போது எந்த மாதிரி உடையணிய வேண்டும் என்று ஒரு மணி நேரம் வாதிட்டார்கள். இதற்க்கு ஒரு 'Fashion Designer' மற்றும் இரண்டு முன்னாள் கிரிகெட் வீரர்கள் கருத்து மோதலில் ஈடுப்பட்டனர்.

வினை எங்கே உள்ளது என அப்போது புரிந்தது. ஒரு பகுதியில் பல விரர்கள் நல்ல பயிற்சியில் ஈடுப்பட பணமில்லாமல் ஒதுங்குகின்றனர். மறு சாரர் சேர்த்த பணத்தை எப்படி செலவளிப்பது என தெரியாமல் வாதடுகின்றனர். தவறு வேறு எங்கும் இல்லை. நம்மிடம் தான் உள்ளது. நாம் தான் கிரிகெட் வீரர்களை கடவுளாக பார்க்கும் உயர்ந்த எண்ணம் உடையவர்கள். நான் படிக்கும் காலத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டி நடந்தால் அன்று அரசாங்கம் விடுமுறை அளிக்கும். இப்படி அரசங்கமே துக்கிவிட்ட விளையாட்டு, கிரிகெட். கால்பந்து விளையாடுபவருக்கு அதன் அருமை தெரியும். 150 கோடி பேர் இருக்கும் ஒரு நாட்டில், 15 பேர் கொண்ட ஒரு கால்பந்து அணியை உருவாக்க முடியவில்லை என்பது வெட்கத்துக்குரியது.

கால்பந்து நிலைமை இது என்றால் நம் தேசிய விளையாட்டு இன்னும் சிதைந்திருக்கிறது. பலருக்கு நம் தேசிய விளையாட்டு எது என்பதே மறந்திருக்கும். அதில் இருக்கும் அரசியல் அனைவருக்கும் வெளிச்சமானது. மத்திய அரசாங்கம் எடுக்கும் தெளிவான முடிவுதான் இதனை மீண்டும் உயிர்ப்பிக்கும்.

சரி மேலே இருக்கிற புதிருக்கு வருவோம். நான் கடந்த முறை அம்மாவுக்கு போன் செய்தபோது, தாத்தாவும் ஆச்சி (பாட்டி, நாங்கள் இப்படி அழைப்பது வழக்கம்) ஆடி முடிந்து ஆனியில் சென்னை வருவதாக கூறினார். எனக்கு ஆடித்தள்ளுப்படி தெரியும் ஆனால், இங்கு இருப்பதினால் அதுவும் மறந்துவிட்டது. அசட்டுத்தனமாக அம்மாவிடமே கேட்டுவிட்டேன். அப்புறம் எனக்கு புரிகின்ற மாதிரி ஆங்கில மாததில் கூறினார். சரி, இங்கே என்னை மாதிரி எத்தனை பேர் இருக்காங்க ஒரு கணக்கெடுப்பு. சரி புதிருக்கான விடை இதோ...

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி

இந்த மாததில் பல உண்மைகள் அடங்கியிருக்கின்றன. தமிழ் மாதங்கள் சூரியனின் சுற்றுப்பாதையில் மையமாகக்கொண்டு கணக்கிடப்படூகின்றது. 12 மாதங்கள் 12 ராசிகளைக் கூறுகிறது. ஜோதிடசாஸ்த்திரத்தில் இதை பன்னிரண்டு கட்டங்களில் அல்லது வீடுகள் என வரையருப்பர். ஒவ்வோரு வீட்டிலேயும் சூரியன் ஒரு மாதம் இருக்கும். இதனை கணக்கிட்டே மற்ற கீரகங்களின் நிலையை நிர்ணயம் செய்யப்படுகின்றது. கல்லூரிக்காலங்களில் வானியல் படிக்கும் ஆசையில் சிறிது ஜோதிடமும் பயின்றேன். நமது முன்னோர்கள் விட்டு சென்ற அரிய கலை இந்த வானியல் சாஸ்திரமாகும். இப்போது விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் பல விஶயங்கள் நம் சாஸ்த்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜோதிடம் ஒருவரின் காலத்தை சொல்கிறதோ இல்லையோ ஆனால் பல ரகசியங்களை உள்ளடக்கியது.

- மாதம் - இராசி
1 சித்திரை - மேடம்
2 வைகாசி - இடபம்
3 ஆனி - மிதுனம்
4 ஆடி - கர்க்கடகம்
5 ஆவணி - சிங்கம்
6 புரட்டாசி - கன்னி
7 ஐப்பசி - துலாம்
8 கார்த்திகை - விருச்சிகம்
9 மார்கழி - தனு
10 தை - மகரம்
11 மாசி - கும்பம்
12 பங்குனி - மீனம்


சரி எப்படி இந்த ஆடித்தள்ளுபடி வந்தது என யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் பின்னூடத்தில் இட மறவாதீர்கள்.

நட்புடன்,

ஸ்ரீதர்பின்குறிப்பு: சில கருத்துக்கள் wikipedia விலிருந்து எடுக்கப்பட்டது.

July 15, 2006

அஞ்சலில் வந்தது

July 12, 2006

சமையல் குறிப்பு -- பயம் தவிர்க்கவும்

தேவையான பொருள்கள்:

அரிசி -- 3 கிண்ணம்.
பருப்பு -- 1 கிண்ணம்
புளி -- சிறிதளவு,
கத்திரிக்காய் -- 1,
முருங்கை -- 4 துண்டுகள்,
வாழக்காய்
கேரட்
பீன்ஸ்
உருளை
மிளகாய் தூள்
உப்பு
தேங்காய் துருவல்
கிளங்கு

செய்முறை:

1. அரிசி : து. பருப்பு --> 3:1 எடுத்து கொள்ளவும்.
2. அதில் புளி கரைசல், காய்கறிகள், மிளகாய்தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து

குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
3. இக்கலவையுடன் எண்ணெய், கடுகு தாளித்து சேர்க்கவும். தனியாக தாளிப்பு செய்து சேர்க்கவும்.

அரிசி + பருப்பு ---> தண்ணீர்
3 + 1 ---> (4 x 3) = 12 கப் தண்ணீர்

அரிசி : தண்ணீர்
1 : 2
பருப்பு : தண்ணீர்
1 : 3

பயப்படாதிங்க.. என்ன பாருங்க எவ்வளவு தைரியமா இருக்கேன்.. இதுக்கே பயந்தா எப்படி..
ஒன்னும் இல்லைங்க.. சென்னை போய்ட்டு வந்த கதை இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு. அதையும் சொல்லி முடிச்சிக்கிறேன்.

இங்கே பக்ரேன் ல நானே சமையல் பண்ணி சாப்பிட்றேன் வீட்லே சொன்னேன். அதுக்கப்புறம்
நடந்த கூத்து தான் மேலே சொன்னது. சித்தி, அத்தை னு ஒருத்தர் விடாம சமையல் குறிப்பு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. சமையல் செய்றத விட, இவங்க சொன்ன சமையல் குறிப்பு எல்லாம் எடுத்து எடுத்து கையே வலிக்க ஆரம்பிச்சிடிச்சி.

ஒரு நாள் அம்மா கூட்டாஞ்சோறு செய்திருந்தாங்க. அம்மா சமையல் யாருக்கு தான் பிடிக்காது,
அதுவும் இல்லாம ஒரு 8 மாசமா பாலைவனத்துல கஷ்டப்பட்டிருந்தேன். அதனால சும்மா
பாத்திக்கட்டி சாப்பிட ஆரம்பிச்சேன். அண்ணிக்கு ரொம்ப சந்தோஷம், அவங்க செய்றத அந்த
அளவுக்கு நான் விரும்பி சாப்பிடமாட்டேன். அன்னைக்கு என் கிரகம், நான் நல்லா சாப்பிடறத
பாத்துட்டு சரி இதை இவனுக்கும் சொல்லி தந்துடுவோம் முடிவுப்பண்ணிட்டாங்க.

நான் இதுக்கு தீவிரமா எதிர்ப்பு தெரிவிச்சேன். கடைசியா எனக்கு "கூட்டாஞ்சோறு செய்வது எப்படி" னு எழுதி தந்தா போதும் னு ஒரு மனதா திர்மானம் போட்டோம். சரி எழுதுறது யாரு? நாம அந்த மாதிரி கஷ்டமான வேலை எல்லாம் செய்ய மாட்டோம். அதனால அண்ணியே அந்த வேலைய எடுத்துக்கிட்டாங்க. எல்லோரும் சுத்தி அமர்ந்துட்டு வேலைய ஆரம்பிச்சோம். அம்மா சொல்ல சொல்ல அண்ணி எழுத அரம்பிச்சாங்க. நான் ஸ்ரீராம கைல வச்சிக்கிட்டு வேடிக்கை பாக்க ஆரம்பிச்சேன்.

இப்போ தான் குழப்பம் ஆரம்பம். எப்படி எழுதினா நல்லா வரும். அம்மா ஒரு வரி சொல்ல,
அதையே அண்ணி எழுத்து வடிவிலே போட, அப்பா அதற்கு சம்மதம் தரல. ஒரு வாக்கியத்துக்கு பல விதமான வடிவங்கள் தந்தாங்க. கொஞ்சம் காகிதமும், நேரமும் செலவான பிறகு மேலே சொன்ன சமையல் குறிப்பு தயாரானது. அதுல கடைசியா இருக்கிற புள்ளிவிவரம் அப்பா பிறகு சேர்த்தது.

அம்மா எப்படிப்பார்த்தாலும் ஒரு 30 வருஷமா சமையல் பண்ணிட்டு இருக்காங்க, அண்ணி இந்த கூட்டணில சேர்ந்து 3 வருஷமாச்சு. இவங்களால ஒரு சமையல் குறிப்பு எழுத இவ்வளவு நேரமாச்சி ஒரு கேள்வி?.

நான் இந்த வேலைக்கு சேரும் போது முதல்ல ஒரு 2 மாசம் Training அனுப்பினாங்க. அந்த
Training ல ஒரு பாடம் 'Effective Technical Writing Skill'.

சரி இந்த பாடத்தை இப்போ நான் சொல்ல போறது இல்ல. (நல்ல வேலை நிங்க எல்லாம்
தப்பிச்சிங்க). அதில் இருந்து சில முக்கிய கருத்துக்கள். எழுத ஆரம்பிக்கும் மூன் நனைவில் இருக்க வேண்டிய கேள்விகள்.

* யாருக்காக எழுதப்போகிறோம்?
* எதற்க்காக எழுதப்போகிறோம்?
* என்ன எழுதப்போகிறோம்?
* எப்படி எழுதப்போகிறோம்?
* எப்போழுது எழுதப்போகிறோம்?

இவை அனைத்திற்க்கும் விடை இருந்தால் நாம் எழுதும் எந்த கோப்பும் சரியான இலக்கை
அடையும்.

இவ்வளவு சொன்ன பிறகு, யாராவது இந்த கூட்டாஞ்சேறு செய்து பார்த்து நல்லா இருக்கானு
சொல்லவும்.சரி கடைசியா ஒரு உண்மையை சொல்றேன். மேலே சொன்ன அந்த 5 கேள்விகளும் எனக்கு இந்த பதிவு எழுதும் போது மறந்துவிட்டது. அப்புறம், என்னோட 'Training Documents' ல தேடி எடுத்து படித்து போட்டேன்.

நட்புடன்,

ஸ்ரீதர்

July 10, 2006

இசையுடன் ஓர் இரவு

இசை செய்யும் வித்தைகள் ஆயிரம். கொஞச காலமா எனக்கு பிடிச்ச இசையை கேக்க முடியல. இன்னைக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. சும்மா இளையராஜா பாடலை தட்டி விட்டேன். அருமையான பாடல்கள். உடலில் புகுந்து உயிரில் கலந்தது இசை. நான் ரொம்ப ரசிச்ச பாடலின் வரிகள் உங்களோட பகிர்ந்துக்க போறேன்.

இதயம் ஒரு கோவில் -- இதய கோவில்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன் (2)

(இதயம் ஒரு)

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜ“வ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜ“வன் ஒன்றுதான் என்ரும் புதிது

(இதயம் ஒரு)

காமம் தேடும் உலகிலே ஜ“வன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜ“வன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜ“வன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

(இதயம் ஒரு)

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜ“வன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்ரும் வாழ்கவே

(இதயம் ஒரு)

என்னைக்கவர்ந்த இன்னும் சில திரைப்பாடல்கள் இங்கே.

http://thirai-kavithaigal.blogspot.com/

இசையுடன்,

ஸ்ரீதர்

July 07, 2006

வலையில் விழுந்தது - விகடன்விர்ர்ர்ரென விரைந்து வருகிறது ஒரு படகு. கடலின் நடுவே சின்னச் சின்னதாக மணல் திட்டுக்கள், பொட்டலங்களைத் துõக்கியெறிவது போல சிலரை அவசரகதியில் தள்ளிவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போகிறது படகு.

கரை மணலைப் பார்த்த புன்னகையும், சொந்த மண்ணைத் தொலைத்த கண்ணீருமாக இப்படி தினம் தினம் கூட்டம் கூட்டமாக இந்தியக் கடலோரம் வந்து இறங்குகிறார்கள் ஈழத் தமிழர்கள்

பிழைச்சு வந்துட்டம். இனி பயம் இல்லை. அழக்கூடாது அம்மா இருக்கேன். அழாதேடா செல்லம் என்று தேற்றுகிற தன் தாயின் மடியில் முகம் புதைத்து உடல் நடுங்கக் கதறுகிறாள் ஜனனி. அப்பா.... அப்பா.... என்ற ஒரே வார்த்தை மட்டுமே திரும்பத் திரும்ப. மனைவியம் மகளும் மட்டும் பிழைத்தால் போதுமென்று இருந்த பணத்தையெல்லாம் படகுக்காரனுக்குக் கொடுத்து அனுப்பிவைத்திருக்கிறார் அந்தப் பாசமிகு தந்தை.

பத்து மணி நேரத்துக்கும் மேலாக, மூச்சுத் திணறலோடு உயிரின் விளிம்பில் தத்தளிக்கிறது எட்டுமாதப் பிஞ்சு லச்சு. உக்கிரமான கடல் காத்து வீசு அலை எங்களது போட்டில் விழுந்துடுச்சு. கடவுளே.... சால கடல் நீர் இந்தப் பிள்ளையின் முகத்தில் அறைஞ்சிடுச்சு. என் பிள்ளைக்கு மருத்தும் பார்க்க இயலுமா? என்று கதறுகிற யோகேஸ்வரியுடன் கடற்படையினரிடம் மன்றாடிக் கொணடு டருக்கிறார் கணவர் யோகராசா.

படகு கவிழ்ந்து எல்லோரும் ஆளுக்கு ஒரு திசையில் நீந்திப் போனோம். என்னோட மூன்று மகள்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் என் சின்ன மகனை மட்டும் முதுகில் சுமந்து நீந்திக் கொணடே வந்தேன். இரவு நேரம் இருட்டைத் தவிர, எதுவும் தென்படவில்லை. மூர்ச்சையாகி மயங்கிய பிள்ளையைச் சுமக்கமாட்டாமல் தண்ணீரிலேயே விட்டுவிட்டு இருபதடி துõரம் நீந்தி வந்தால் காலில் கரை தட்டுப்பட்டது. ஐயோ.... என் பிள்ளையை நானே கொன்றுவிட்டேன். என்னை எந்தக் கடவுளும் மன்னிக்கமாட்டார் என்று கத்துகிறார். அகதிகள் முகாமில் இருக்கும் கந்தசாமி.

இலங்கைப் போரில் துõக்கி எறியப்பட்டுக் கூட்டம் கூட்டமாக அகதிகளாக ராமேஸ்வரம் தீவில் அடைக்கமாகிறார்கள் இலங்கைத் தமிழர்கள். மன்னார், பேசாலை பகுதிகளிலிருந்து புறப்படும் படகுகள் ஏக்கமும் துயரமும் சுமந்தபடி வந்து கொண்டே இருக்கின்றன.

18 கி.மீ கடல் பயணத்தில் மரணத்தின் வாசல்வரை சென்று பிறைக்கிறார்கள் அகதிகள். எங்கள் படகில் மொத்தம் 12 பெரியவர்கள், 5 குழந்தைகள், தலைக்குப் பத்தாயிரமும், சிறுசுகளுக்கு 8 ஆயிரமும் தந்து படகு ஏறினோம். நடுக்கடலில் வந்தபோது படகின் ஓரத்தில் விரிசல் விழுந்ததாகச் சொல்லி படகை நிறுத்திவிட்டார்கள். உயிர் பிழைக்கத்தானே படகு ஏறினோம். இப்படி நடுக்கடலில் அனாதைப் பிணமாக வேண்டியதாகிப் போச்சே! என்று அழுதோம். எங்களது உடைமைகளையெல்லாம் துõக்கிக் கடலில் எறிந்தார்கள். பாரம் குறைஞ்சாதான் படகு பிழைக்குமாம். எங்களுக்கு மாற்று உடுப்புக்கூட எதுவும் இல்லை. பையில் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச பணமும் கடலோடு போய்விட்டது. அகதியாக இறங்கியதுமே மானம் மறைக்க உடுப்பு போடக் கேட்கவேண்டியதாகிப் போச்சு. இப்படிப் பிழைக்க வேண்டுமா என்று மனசுக்குள் ஒரு வலி உறுத்திக் கொண்டே இருக்கிறது என்று மரணவாசலைக் கடந்து வந்த தன் துயர அனுபவத்தைச் சொல்கிறார் கோமஸ்.

தொண்டு நிறுவனம் தந்த ரொட்டித் துண்டை அமிர்தமாக எண்ணிச் சாப்பிடுகிறாள் நிஷாந்தினி. ஒரு நாள் பசியை ஈடுகட்டுகிற அவசரம் அவள் கண்களில்!

நல்ல இசை கேட்டால், குழந்தை நன்றாகப் பிறக்கும் என்றார் திரிகோணமலை டாக்டர். என் வயிற்றில் வளரும் பிள்ளைக்கு ஷெல் அடிக்கும் சத்தம்தான் பரிச்சயம். நாங்கள் பிறந்து அகதியானோம். என் பிள்ளை பிறக்கிறபோதே அகதி. ஐயோ ஏன் பிள்ளை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டேனோ? என்று தன் வயிற்றுக்குள் வளரும் எட்டு மாத உயிரைத் தடவிக் கெண்டு கலங்குகிறார் செல்வி.

கடந்த வாரம் நாங்கள் போக இருந்த போட்டை தேவிக்காரர்கள் எரிச்சுப் போட்டாங்க. யாரும் அகதியாப் போகக்கூடாதுன்னு மிரட்டினாங்க. நாங்க போகத் திட்டமிட்டிருந்தது நெரிஞ்சுருந்தா, இந்நேரம் ஏதேனும் ஒரு புதைகுழியில் பிணமாகிப் புதைஞ்சிருப்போம் என்கிறார் கிறிஸ்டியா.

கடல் வழியா தமிழ்நாடு வந்துட்டா, நாங்க பிழைச்சோம். இல்லையென்றால் கடலிலேயே இறந்து போவோம். ஆனால் எங்கள் நாட்டில் சிங்களப் படையிடம் சிக்கினால் ஆண்கள் உடல் சிதைந்து சின்னாபின்னமாகி இறக்க வேணும். பெண்கள் சிக்கினால் பல ஆண்களின் வல்லுறுவுக்கு ஆளாகி இறக்க வேணும். கடலுக்கு அப்படியெல்லாம் சித்ரவதை செய்து கொல்லத் தெரியாதுதானே?

பிழைத்து வந்து அகதியாக வாழ நேர்ந்தாலும், மானத்தோடு இருக்க முடியும். அதனால்தான் எல்லாவற்றையும் துறந்து துணிந்து புறப்படுகிறோம் என்கிற கிறிஸ்டியாவின் வார்த்தைகள் நெஞ்சைச் சுடுகின்றன.

இப்படி ஒவ்வொருவரிடமும் நிறைய சோகங்கள் இருக்கின்றன. உயிரைக் காப்பாற்றித் திட்டில் நம்பிக்கையோடு வந்து இறங்குகிற மக்களை இன்னும் அதிக காயப்படுத்துகின்றன விசாரணைகள்.

தண்ணீரில் நடுங்கிக் கொண்டே வருகிறவர்களுக்கு ஒரு டம்ளர் டீ கொடுக்கக்கூட தனுஷ்கோடியில் வசதி இல்லை. நம் கடற்படையிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அகதிகளை ஆளரவமற்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் படகுக்காரர்கள். 24 மணி நேரமும் வந்து குவியும் மக்கள் வெகு துõரம் நடந்து வந்து கடற்படையிடம் சரணடைய வேண்டியிருக்கிறது. பிறகு காவல் நிலையத்தில் தங்கள் வருகையைப் பதிவு செய்து கொண்டு வெகு நேரம் காத்திருந்த பிறகே, அவர்கள் மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள். குழந்தைகள் மீது யாரேனும் இரக்கப்பட்டுக் குடிக்கப் பால் வாங்கித் தந்தால்தான் உண்டு. அகதிகள் விஷயத்தில் அரசு இன்னும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தனுஷ்கோடியில் இறங்கியவர்களை மண்டபம் முகாமுக்கு அழைத்துச் செல்ல எந்த வாகன வசதியம் கிடையாது. மூட்டை முடிச்சுகளோடு குழந்தைகளையும் சுமந்து கொண்டு வெகுதுõரம் நடக்க வேண்டிய நிலை. அகதிகளை அலட்சியமாக நடத்தாமல், கொஞ்சமாவது கௌரவமாக நடத்த அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற ரோஸ்மேரி, அகதிகளுக்கான தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

மீனவர் கூட்டமைப்பைச் சேர்ந்த அருளானந்தம் அகதிகளோடு மீனவர்களையும் சேர்த்துப் பந்தாடுகிறது அரசாங்கம் என்று குற்றம் சாட்டுகிறார். இலங்கையில் உயிரைப் பணயம் வைத்து அகதிகளை ஏற்றி வருகிற இலங்கைத் தமிழ் மீனவர்கள் அந்நாட்டுக் கடற்படையிடம் சிக்கினால் மரணமோ, சிறைத் தண்டனையோ நிச்சயம். இந்தியக் கடற்படையிடம் சிக்கினாலும் அதே பரிசுதான். இரண்டு நாட்டு அரசுகளும் அகதிகள் மீது இரக்கப்படாமல் நடுக்கடலிலேயே கொன்றுவிட வேண்டும் என்று விரும்புகிறதா? கிடைக்கிற எந்த மீனவரையும், அகதியையும் விடுதலைப் பலியாகவே சித்திரித்து, விசாரணை என்கிற பெயரில் சித்ரவதை செய்து படகைப் பறிமுதல் செய்து சிறையில் தள்ளினால், மீனவர்கள் எப்படி அகதிகளைக் காப்பாற்றுவார்கள்? கடல் நடுவில் உள்ள திட்டில் பசியோடும், பயத்தோடும் இருக்கிற சகோதரர்களைக் கனிவோடு ஏற்றிக் கொண்டு ஒரு தமிழக மீனவன் கரைக்கு வந்துவிட்டால் அவனது வாழ்க்கையே முடிந்துவிடும். இரக்கப்படக்கூடாது என்று அரசாங்கமே சொல்வது தான் வேதனையாக இருக்கிறது. இரண்டு நாட்டு மீனவர்களையும் கைது செய்து கொடுமைப்படுத்துவதை, இரண்டு நாடுகளும் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறார் அருளானந்தம். மண்டபம் அகதிகள் சிறப்பு முகாமுக்குள் நுழைந்தால் தங்களுக்கு வழங்கப்படுகிற உதவித் தொகையையும், உணவுப் பொருட்களையும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் அகதிகள்.

குழந்தைகளுக்கு வழங்கப்படுகிற உதவித்தொகையில் பால் வாங்கவும் ஏலாது. எங்களுக்கு ஏதேனும் உடலுழைப்பு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தால், நாங்கள் எங்கள் உழைப்பிலேயே கொஞ்சம் சுயமரியாதையோடு வாழ்ந்துவிடுவோம் என்கிறார்கள் அகதிகள் கண்ணீரோடு.

அகதிகள் வந்திருப்பதாகக் காவல் நிலையங்களிலிருந்து மண்டபம் முகாம் அதிகாரிகளுக்குத் தகவல் வந்து கொண்டே இருக்கிறது. அரசு அலுவலகத்தில் கோப்புகள் நகரும் விதத்திலேயே மிகவும் மந்தகதியில் நடக்கின்றன. வேலைகள், அகதிகளுக்கு வழங்கப்படுகிற உணவுப் பொருட்களிலும் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் இருக்கின்றன. சொந்த நாட்டில் மட்டுமின்றி, வந்த நாட்டிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள் அப்பாவிகள், எங்கள் சகோதர நாடுதானே இந்தியா எங்கள் நாட்டில் அமைதி ஏற்பட, எங்கள் தமிழ்ச் சகோதரர்கள் உதவி செய்வார்கள்தானே? என்று மூட்டை முடிச்சுகளோடு நம்பிக்கையையும் சுமந்தபடி கேட்கிறார்கள் இலங்கைத் தமிழ் அகதிகள்.

தனுஷ்கோடி கடல் அகதிகளின் கண்ணீரால் அதிகமாகவே கரிக்கிறது!

July 06, 2006

சென்னை விஜயம்..மன்னிக்கனும்...மன்னிக்கனும்...மன்னிக்கனும்... போன மாசம் அவசரமா சென்னை போக வேண்டியதா போச்சு. சொல்லக்கூட நேரம் இல்ல. இதோ இப்பதான் வந்து கனிணி முன்னாடி இருக்கேன். ஆனா! சென்னைக்கு நான் வந்த விஷயத்தை சென்னைவாசிகளுக்கு நம்ம மழை சொல்லிடிச்சு. சென்னை 8 மாசத்துல ஒரு மாற்றமும் இல்ல. அப்படியே தான் இருக்கு. ஆனா என்னோட பார்வை தான் மாறியிருக்கு. சென்னையும் பக்ரைன் மாதிரி மாறாதா என சின்ன ஆசைதான். அப்புறம் என்ன 10 நாளும் ஊர் சுத்தறது தான் வேலை. வானிலையும் கொஞ்சம் நல்லா இருந்ததால கவலையே இல்ல. நிறைய வேலை பாதியிலே இருந்தது. ஒரளவுக்கு முடிச்சாசு. அம்மாவின் ஆசையை இப்போதான் நிறைவேத்த முடிந்தது.

சென்னை வந்ததுக்கு இன்னோரு முக்கிய காரணம், ஸ்ரீராம். இரண்டரை வயது அண்ணன் மகன். 8 மாசமா வெறும் தொலைபேசியிலே குரலைக்கேட்டவனுக்கு ஒரு எட்டு போய் பாக்கலாம்னு நினைச்சேன். உடனே கிளம்பிட்டேன். ஸ்ரீராம் மீது எல்லோருக்கும் கொஞ்ச பாசம் அதிகம். குடும்பத்திலே முதல் குழந்தை. அதுவும் எனக்கு ரோம்ப ராசிக்கார பயல். அவன் பிறந்தநாள் அன்று தான் என் வேலையோட 'Appointment Order' வாங்கினேன். அவன் என்ன கேட்டாலும் வீட்டில அடுத்த நொடி இருக்கும். எல்லாரும் கொஞ்சம் அதிகமாவே செல்லம் கொடுப்போம்.

நான் அவசரமா கிளம்ப வேண்டியிருந்ததால அவனுக்கு எதுவும் வாங்கமுடியலை. வழியிலே கொஞ்சம் இனிப்பு தான் வாங்க முடிஞ்சது. பரவாயில்ல! இந்தியா போய் வாங்கிகலாம்னு வந்துட்டேன்.

இந்தியாவில, முடிந்த அளவு நேரத்தை அவனுக்காக செலவளித்தேன். அவனுக்கு பிடிச்சது, பிடிக்காதது, பார்த்தது, கேட்டது எல்லாம் வாங்கித்தரனும் ஆசைப்பட்டேன். இரண்டரை வயசு ஆசைகள் ஒன்னும் பெரிசா இல்ல. 10 நாளும் எப்படிப்போச்சு தெரியலை. கிளம்ப வேண்டிய நாள் வந்தாச்சு. அம்மா இன்னும் கொஞ்ச நாள் இருக்க சொன்னாங்க. ஆனா நான் தான் விடுப்புல இருந்தா சம்பளம் வராது னு கிளம்பிட்டேன்.

எனக்கு மறுநாள் அதிகாலைல Flight. அதனால பொருள் எல்லாம் முதல் நாளே எடுத்து வச்சுட்டேன். காலைல ஸ்ரீராம எழுப்ப வேண்டாமே சொல்லிட்டு அப்போதே விடைப்பெற்றுவிட்டேன். அவன் தூங்க போய்விட்டான். நானும் அன்றைய கால்ப்பந்து போட்டியில் அமர்ந்துவிட்டேன். சிறிது நேரம் களித்து, எனக்கு பக்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்டுக்கொண்டிருந்தது. போட்டியில் லயித்திருந்த நான், சற்றே திரும்பிப்பார்தேன். ஸ்ரீராம் பக்கத்தில் அமர்ந்து எதோ சொல்லிக்கொண்டிருந்தான். அவன் மழலை மொழி எனக்கு சரியாக விளங்காது என்பதாலும், போட்டியின் மீது கவனம் இருந்ததாலும் சரியாக கவனிக்கவில்லை. குரல் திரும்ப திரும்ப கேட்கவே, சற்றே கவனிக்க அரம்பித்தேன்.

"சீத்தா ... ஊருக்கு.... நாளைக்கு.... போ... no" என்றான். அவன் சொல்ல நினைத்தது பின்னர் தான் புரிந்தது. அவன் முதல் முறையாக பிரிவு என்பதை உணர்கின்றான். அவன் கண்களின் இருந்த பிரிவை கண்டேன். அவன் அதிகமாக அடம் பிடிக்க தெரியாது. வீட்டில் எல்லோரும் வேலைக்கு செல்வதால் அவனுக்கு அது பழகிவிட்டது. ஆனால், இந்த முறை அவன் அழுது அடம் செய்திருந்தால், அதை பெரிதாக எடுத்திருக்க மாட்டேன். இந்த முறை அவன் கேட்ட விதம் வேறுவிதமானது. அவன் பிரிவை எண்ணி, என்னை வேண்டிக்கொண்டு இருந்தான். என்னால் அவனுக்கு விடைத்தர முடியவிலை.

அவன் கேட்டாதது, தெரியாதது எல்லாம் வாங்கித்தந்த என்னால், இதை செய்ய முடியவில்லை. அப்பொழுது சில மாதங்களுக்கு முன்பு படித்த ஒரு கதை ஞாபகம் வந்தது.

அப்பா அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினார். தன் அறு வயது மகன் துங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்தார்.

"இங்க என்னடா பண்ற. இன்னும் துங்கலையா?" அப்பா மகனிடம் கேட்டார்.

"அப்பா நாளைக்கு School' ல Annual Day' பா. நான் பேச்சுப்போட்டியில பரிசு வாங்குறேன். நிங்க நாளைக்கு School' க்கு என்னோட வருவிங்களா?".

"கண்ணா! நாளைக்கு அப்பாவுக்கு office' ல முக்கியமான வேலை இருக்குடா. என்னால வர முடியாது பா. நீ போய் தூங்கு."

"அப்பா! எல்லாரோட 'Parents' சும் வராங்கப்பா. ஒரு நாளைக்கு வந்தா போதும்பா! நான் தான் first prize வாங்குறேன். நீங்களும் வரனும்பா!"

"கண்ணா! அப்பா சொன்னா கேட்டுக்கனும். போய் தூங்கு."

"இல்ல பா ......"

"டேய், அப்பா இவ்வளவு சொல்றேன், இன்னும் பிடிவாதமா இருக்கியே. நீ கேட்டதெல்லாம் வாங்கி தரேன். 'Pocket Money' தரேன். உன்னக்கு எல்லாம் செய்தாலும் இப்படி அடம் பிடிக்கிறியே! அப்பா, ஒரு நாள் 'Office' போகலைனா 1000 ருபாய் நஷ்டம். அப்புறம் யார் உன்னக்கு இதெல்லாம் பண்ணுவா. நீ போய் தூங்கு" எனறார் கோபமாக.

மகன் அறையை விட்டு வெளியேறினான்.

சிறிது நேரம் பிறகு, மகன் கதவை திறந்தான்.

"அப்பா!"

"என்னடா"

"அப்பா, நிங்க தந்த 'Pocket Money' ல கொஞ்சம் save பண்ணிருக்கேன். 800 ருபாய் இருக்கு. இதை வாங்கிக்கிட்டு ஒரு நாள் என் கூட வர முடியாதா?"

அப்பா அதிர்ந்தார்.

-------------------------------------

நல்லவேளை, நான் அம்மாவிடம் என் சம்பளத்தை பற்றி சொன்னதை அவன் கேட்கவில்லை. இல்லை என்றால், அவன் என்னுடைய ஒரு நாள் சம்பளம் தந்து என்னை உடைத்திருப்பான்.

இன்றும் சில சமயம், ஸ்ரீராம் எனது வீட்டிலுள்ள அறைக்கு சென்று தேடுகிறான். சில நாட்களில் என்னை மறந்துவிடுவான். நானும் அவனின் நினைவுகளில் இருந்து விடுபடுவேன்.

மறதி என்று ஒன்று கடவுள் தராவிட்டால் உலகம் எப்பொழுதோ கண்ணிரில் முழ்கியிருக்கும்.

பிரிவுடன்,

ஸ்ரீதர்