August 02, 2006

நவீன புலிகேசிகள் -- வலையில் விழுந்தது ! -- தினமலர்




கோக கோலா மற்றும் பெப்சி குளிர் பானங்களில் அளவுக்கு அதிகமாக ரசாயன நச்சு இருப்பது தற்போது நடந்த ஒரு ஆய்வின் மூலம் மீண் டும் தெரிய வந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு புகாரை தெரிவித்த பிறகும் அவ்விரு நிறுவனங்களும் இந்த விஷயத்தில் எந்தவித மாறுதலும் மேற்கொள்ளவில்லை என்பது இதன் மூலம் நிருபணமாகியுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களான கோக கோலா மற்றும் பெப்சி குளிர்பானங்களில் அளவுக்கு அதிகமான பூச்சி கொல்லி மருந்து உள்ளது என்று 2003ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்தது. இந்த ஆய்வை மேற் கொண்டது அறிவியல் மற்றும் சுற்றுசுழல் மையம் என்ற அமைப்பு தான். அப்போது இப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. மக்களின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் இந்த குளிர்பானங்களை இந்தியாவில் விற்பனை செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்தும் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற் பட்டது. இதுப்பற்றி விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதன்பிறகு இப்பிரச்னை அமுங்கி விட்டது. தண்ணீரில் காணப்படும் பூச்சி கொல்லி மருந்து தான் குளிர்பானங் களிலும் காணப்படுகிறது என்று அப்போது இதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், கோக கோலா மற்றும் பெப்சி குளிர் பானங்களில் உள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவை பரிசோதிக்க அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் மீண்டும் ஒரு ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது.

இதற்காக கோக கோலா மற்றும் பெப்சி சார்பில் விற்பனை செய்யப்படும் பிரபலமான 11 பிராண்ட் குளிர் பானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. பன்னிரண்டு மாநிலங்களில் உள்ள 25 தொழிற்சாலைகளில் இருந்து 57 மாதிரிகள் திரட்டப் பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்கள் குறித்து அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையத்தின் இயக்குனர் சுனிதா நாராயண் டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து குளிர்பானங்களிலும் மூன்று முதல் ஐந்து வரையிலான பல்வேறு பூச்சி கொல்லி மருந்துகளின் கலவை காணப்பட்டது. இந்திய தர நிறுவனம் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 25 மடங்கு அதிகமான அளவு பூச்சி கொல்லி மருந்து அந்த குளிர்பானங் களில் இருந்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்த போது இந்த குளிர்பானங்களில் நான்கு பூச்சி கொல்லி மருந்துகளின் கலவையே இருந்தது. தற்போது இது ஐந்து பூச்சி கொல்லி மருந்துகளின் கலவையாக உயர்ந்துள்ளது.லின்டேன் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயன நச்சு அனுமதிக் கப்பட்ட அளவை விட 54 மடங்கு அதிகமாக இந்த குளிர்பானங்களில் காணப்பட்டது. இதே போல் குளோர்பைரிபாஸ் என்ற ரசாயன நச்சின் அளவு 47 மடங்கு அதிகமாகவும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹெப்டாகுளோர் என்ற ரசாயன நச்சு 71 மடங்கு அதிகமாகவும் இந்த குளிர்பானங்களில் காணப்பட்டன. இதில் அனுமதிக் கப்பட்ட அளவை விட பெப்சி குளிர்பானங்களில் 30 மடங்கு ரசாயன நச்சும், கோக கோலாவில் 27 மடங்கு ரசாயன நச்சும் இருப்பது தெரிய வந்துள்ளது.

மக்களின் உடல் நலன் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இந்த ஆய்வு வெளிப்படுத் துகிறது. இந்த குளிர்பானங்களை பாதுகாப்பானதாக்க கடந்த காலங் களில் குறைந்த அளவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுனிதா நாராயண் கூறினார்.

July 29, 2006

கடவுளுக்கு ஒர் மடல் -- அஞ்சலில் வந்தது





















July 26, 2006

The Matrix -- ஒரு தேடலின் கதை



கடந்த வாரத்தில் ஒரு அருமையான ஆங்கில படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான படம் என சொல்வதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. படத்தில் சொல்ல வந்த கருத்துக்கள் அனைவருக்கும் புரிந்து, அதை இயக்குனர் வியக்கும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

2. படம் எதைப்பற்றியது என்றே புரியாமல், ஆனால் காட்சிகள் செய்யும் மாயாஜாலத்தை கண் இமைக்காமல் பார்க்கும் படி அமைந்திருக்க வேண்டும். (இன்னும் சொல்லனும்னா பட்டிக்காட்டான் முட்டாய்க்கடைய பாக்குற மாதிரி).

ஆங்கில படம் பாக்கும் போது நான் எப்போதுமே இரண்டாவது ரகம் தான். யாரையாவது பக்கதில ஒக்கார வச்சிக்கிட்டு கதை கேட்டுக்கிடே இருப்பேன். ஆனா இந்த தடவை அப்படி செய்ய முடியலை. யாருக்குமே புரியாத மாதிரி எடுத்து வைச்சிருக்காங்க.

எல்லாம் நம்ம "The Matrix" படத்த பத்தி தான் சொல்றேன். எத்தனை தடவைப்பார்த்தாலும் புரியாத புதிராகவே இருக்குது. எதோ எனக்கு புரிஞ்சத உங்களுக்கு சொல்றேன்.

படத்துல 'Neo' னு ஒரு கதாநாயகன். நம்ம சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் எல்லோரையும் போல சும்மா பறந்து பறந்து அடிப்பார். அவருக்கு ஒரு ஜோடி 'Trinity' னு பேரு. இவங்க இரண்டு பேரும் சேந்தாங்கனா, சும்மா கில்லி மாதிரி 'Blazer' ல வர வில்லனுங்கல பந்தாடுவாங்க. அப்புறம் இந்த படத்துல, சாரை சாரையா இயந்திர சிலந்தி பூச்சி வரும். இந்த சிலந்திங்க நம்ம மக்களை ரொம்ப இம்சிக்கும்.

படத்தோட முதல் பாகத்தில், நம்ம 'Neo' வ வந்து இன்னோரு உலகத்துக்கு தொலைபேசி மூலமா கொண்டு போவாங்க. அங்க 'Neo'க்கு பறக்குறதுக்கு, சண்டைபோடுறதுக்கேல்லாம் சொல்லி தருவாங்க. அப்புறம் நம்ம கதாநாயகன் தனி ஆளா எல்லாரையும் காப்பத்துவார். இன்னும் கொஞ்சம் கதைக்குள்ளே போனா, நாம இருக்கிற உலகமே ஒரு இயந்திரங்களால் உருவாக்கினது என்றும், நமது விதி இந்த இயந்திரங்க கணினியில பண்ற மாதிரி 'Program' பண்ணியிருக்குதுனு சொல்லவறாங்க. அப்படியே தலை ஒரு அடி மேலே எறி சுத்துற மாதிரி இருக்குது.

மனிதன் தோன்றிய காலம் முதலே இந்த மாதிரி கருத்துக்கள் இருந்து வருகிறது. நாம் எல்லோரும் காலத்தின் அடிமைகள் என உணர்கின்றோம். இப்படத்தில் ஒரு காட்சியில், 'Neo' ஒரு டீக்கடையை (அதாங்க நம்ம 'Coffee Shop') பார்த்து அங்கு உணவு சுவையாக இருக்கும் என்று கூறுவார். உடனே அருகிலிருப்பவர் "நாம் சுவை என்னும் உணர்ச்சியால் அடிமைபட்டிருகிறோம்" என்பார். சிறிது சிந்தித்தால், நமக்கு இறைவன் தந்திருக்கும் ஐந்துபுலன்களே, நம்மை அடிமையாக்கி உள்ளது என்பதை அறியலாம். 'Shakesphere' இந்த உலகம் ஒரு நாடக மேடை எனக்கூறினதை இப்படியும் எடுத்துக்கொள்ளலாம். மனிதன் "நான் யார்?" எனக்கேள்விகளுக்கு இந்த மாதிரி விசித்திர விடை பதிலாக கிடைக்கின்றது. அனைத்திற்க்கும் மூலக்காரணமாக இந்த கேள்வி அமைகின்றது.

"நான் யார்" என்ற கேள்விக்கு பலரும் பல விதமாக பதில் தேடுகின்றனர். ஆத்திகர், இறைவனிடம் சென்று கேட்கிறார். விஞ்ஞானி, பூமியை குடைந்தும், வின்மீன்களை எண்ணியும் அராய்கிறார். ஞானி தனக்குள்ளே தேடுகின்றார். விடை கிடைத்ததோ இல்லையோ, ஆனால், தேடல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒரு பாடல் வரியில், கவிஞர் இப்படி கூறுவார்,

"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்..
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்.."

உயிருள்ள வரை தேடல் தொடர்ந்திருக்கும்.

ஒரு நாள் இரவு, தூங்குறதுக்கு முன்னாடி இதைப்பற்றி யோசித்துப்பாருங்க.. விடை வருதோ இல்லையோ நல்லா தூக்கம் வரும்.

நீங்க ரொம்ப பொருமைசாலி தான்.. இது வரைக்கும் படிச்சிடிங்களே.. சரி அப்படியே இதுக்கும் ஒரு விடை சொல்லிட்டு போங்க..

ஒரு ஊருக்குள்ளே இரண்டு ரயில் பாதைகள் இருக்கு.. ஒன்னுல ரயில் எப்போதுமே போகாது.. இது அந்த ஊர்ல இருக்கிற எல்லோருக்குமே தெரியும். ஒரு நாள், சில பள்ளிக்கூடத்து பசங்க அந்தப்பக்கமா விளையாட போனாங்க. ஒரு பையன் மட்டும், அந்த இயங்காத ரயில் பாதைல விளையாட ஆரம்பிச்சான். மிச்சமிருந்த 6-7 பசங்க, ரயில் போகும் பாதையிலே விளையாட அரம்பிச்சாங்க.

அந்த சமயம் பார்த்து ஒரு ரயில் அந்தப்பக்கமா வருது. இத, அந்த பாதைல தூரமா இருக்கிற 'Line man' கவனிச்சிட்டான். அவனால ஓடிபோய் கத்த முடியாது. பசங்க ரொம்ப தொலைவுல இருக்காங்க. இப்போ 'Line man' கிட்ட ஒரு 'Gear' இருக்குது. அந்த 'Gear' மாத்தினா, ரயில் போற பாதைய மாத்த முடியும். இப்போ 'Line man' எந்த பாதையில ரயில போகவைப்பார்.

1. ரயில் சாதாரணமாக போகாத பாதையில் ஒரு பையன் தான், ரயிலை திருப்பிவிட்டால் ஒரு பையனுக்கு தான் அடிப்படும். ஆனா! அந்த பையன், இந்த பாதையில் ரயில் போகாதுனு நம்பிக்கையா விளையாடிட்டு இருக்கான். ரயிலை அந்தப்பக்கம் திருப்பிவிட்டால், அந்த பையனோட நம்பிக்கை பொய் ஆகிடும்.

2. ரயில் எப்போதும் போகிற பாதையில் விட்டால், பல சிறுவர்கள் அடிப்படுவார்கள்..

சரி.. இப்போ நீங்கதான் அந்த 'Line man' ரயில் போறதுக்குள்ள முடிவு பண்ணுங்க..

நட்புடன்,

ஸ்ரீதர்

July 20, 2006

தமிழ் மாதங்கள் -- ஒரு பார்வை



இந்த வாரம் ஒரு புதிரோட ஆரம்பிக்கலாம்.. இந்த தமிழ் மாதங்களை வரிசைப்படுத்துங்கள்.


சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, ஐப்பசி, மார்கழி, மாசி, தை, பங்குனி

இதற்க்கான விடை இப்பதிவின் இறுதியில்....

இந்த வாரம் என்னை ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சியை தந்தது. அது முன்னாள் இந்திய கால்பந்தாட அணியின் தலைவர் வி.பி. சத்யனின் மரணம். அவரை நான் சில முறை சந்தித்து இருக்கிறேன். என் பள்ளிக்காலங்களில் அருகாமையில் நடக்கும் கால்பந்து போட்டிகளில் தலைமையேற்ப்பார். எனக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் இருந்த காரணத்தினால் அவரை பற்றின செய்திகளை சேகரித்தேன்.

அவரின் தற்கொலை பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு விளையாட்டு வீரரின் முடிவு இப்படி அமைந்துவிட்டது வேதனைக்குரியது. இச்செய்தியை ஒரு இந்திய ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் வாசித்தார்கள். அந்த செய்திக்குப்பின் 'Cricket Controveries' என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பினர். அந்த நிகழ்ச்சியில், கிரிகெட் வீரர்கள் விருந்து விழாக்களுக்கு செல்லும் போது எந்த மாதிரி உடையணிய வேண்டும் என்று ஒரு மணி நேரம் வாதிட்டார்கள். இதற்க்கு ஒரு 'Fashion Designer' மற்றும் இரண்டு முன்னாள் கிரிகெட் வீரர்கள் கருத்து மோதலில் ஈடுப்பட்டனர்.

வினை எங்கே உள்ளது என அப்போது புரிந்தது. ஒரு பகுதியில் பல விரர்கள் நல்ல பயிற்சியில் ஈடுப்பட பணமில்லாமல் ஒதுங்குகின்றனர். மறு சாரர் சேர்த்த பணத்தை எப்படி செலவளிப்பது என தெரியாமல் வாதடுகின்றனர். தவறு வேறு எங்கும் இல்லை. நம்மிடம் தான் உள்ளது. நாம் தான் கிரிகெட் வீரர்களை கடவுளாக பார்க்கும் உயர்ந்த எண்ணம் உடையவர்கள். நான் படிக்கும் காலத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டி நடந்தால் அன்று அரசாங்கம் விடுமுறை அளிக்கும். இப்படி அரசங்கமே துக்கிவிட்ட விளையாட்டு, கிரிகெட். கால்பந்து விளையாடுபவருக்கு அதன் அருமை தெரியும். 150 கோடி பேர் இருக்கும் ஒரு நாட்டில், 15 பேர் கொண்ட ஒரு கால்பந்து அணியை உருவாக்க முடியவில்லை என்பது வெட்கத்துக்குரியது.

கால்பந்து நிலைமை இது என்றால் நம் தேசிய விளையாட்டு இன்னும் சிதைந்திருக்கிறது. பலருக்கு நம் தேசிய விளையாட்டு எது என்பதே மறந்திருக்கும். அதில் இருக்கும் அரசியல் அனைவருக்கும் வெளிச்சமானது. மத்திய அரசாங்கம் எடுக்கும் தெளிவான முடிவுதான் இதனை மீண்டும் உயிர்ப்பிக்கும்.

சரி மேலே இருக்கிற புதிருக்கு வருவோம். நான் கடந்த முறை அம்மாவுக்கு போன் செய்தபோது, தாத்தாவும் ஆச்சி (பாட்டி, நாங்கள் இப்படி அழைப்பது வழக்கம்) ஆடி முடிந்து ஆனியில் சென்னை வருவதாக கூறினார். எனக்கு ஆடித்தள்ளுப்படி தெரியும் ஆனால், இங்கு இருப்பதினால் அதுவும் மறந்துவிட்டது. அசட்டுத்தனமாக அம்மாவிடமே கேட்டுவிட்டேன். அப்புறம் எனக்கு புரிகின்ற மாதிரி ஆங்கில மாததில் கூறினார். சரி, இங்கே என்னை மாதிரி எத்தனை பேர் இருக்காங்க ஒரு கணக்கெடுப்பு. சரி புதிருக்கான விடை இதோ...

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி

இந்த மாததில் பல உண்மைகள் அடங்கியிருக்கின்றன. தமிழ் மாதங்கள் சூரியனின் சுற்றுப்பாதையில் மையமாகக்கொண்டு கணக்கிடப்படூகின்றது. 12 மாதங்கள் 12 ராசிகளைக் கூறுகிறது. ஜோதிடசாஸ்த்திரத்தில் இதை பன்னிரண்டு கட்டங்களில் அல்லது வீடுகள் என வரையருப்பர். ஒவ்வோரு வீட்டிலேயும் சூரியன் ஒரு மாதம் இருக்கும். இதனை கணக்கிட்டே மற்ற கீரகங்களின் நிலையை நிர்ணயம் செய்யப்படுகின்றது. கல்லூரிக்காலங்களில் வானியல் படிக்கும் ஆசையில் சிறிது ஜோதிடமும் பயின்றேன். நமது முன்னோர்கள் விட்டு சென்ற அரிய கலை இந்த வானியல் சாஸ்திரமாகும். இப்போது விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் பல விஶயங்கள் நம் சாஸ்த்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜோதிடம் ஒருவரின் காலத்தை சொல்கிறதோ இல்லையோ ஆனால் பல ரகசியங்களை உள்ளடக்கியது.

- மாதம் - இராசி
1 சித்திரை - மேடம்
2 வைகாசி - இடபம்
3 ஆனி - மிதுனம்
4 ஆடி - கர்க்கடகம்
5 ஆவணி - சிங்கம்
6 புரட்டாசி - கன்னி
7 ஐப்பசி - துலாம்
8 கார்த்திகை - விருச்சிகம்
9 மார்கழி - தனு
10 தை - மகரம்
11 மாசி - கும்பம்
12 பங்குனி - மீனம்


சரி எப்படி இந்த ஆடித்தள்ளுபடி வந்தது என யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் பின்னூடத்தில் இட மறவாதீர்கள்.

நட்புடன்,

ஸ்ரீதர்



பின்குறிப்பு: சில கருத்துக்கள் wikipedia விலிருந்து எடுக்கப்பட்டது.

July 15, 2006

அஞ்சலில் வந்தது